சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் நடத்தியதால், அவர் கோபம் கொண்டு தட்சனின் தலையைக் கொய்தார். அவளது மகளான தாட்சாயணி, தனது தந்தையை உயிர்ப்பித்துத் தரவேண்டும் என்று வேண்ட, ஆட்டுத் தலையைப் பொறுத்தி உயிர்ப்பித்தார். தலையிழந்த தட்சனுக்கு தக்க கோலத்தை சிவபெருமான் அளித்ததால் இத்தலம் 'தக்கோலம்' என்று அழைக்கப்படுகிறது.
உததி முனிவர் தனது நோய் தீர இத்தலத்திற்கு வழிபட வந்தபோது, அவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது சிவபெருமான் கருணையினால் அங்கிருந்த நந்தி தேவரின் வாயிலிருந்து தண்ணீர் வெளிப்பட்டது. முனிவரும் அதில் நீராடி, அங்கிருந்த லிங்கத்தை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். ஜலம் சூழ்ந்து சென்றதால் இத்தலத்து மூலவர் 'ஜலநாதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'ஜலநாதேஸ்வரர்', 'உமாபதீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். பிற லிங்க வடிவங்கயைப் போல் இல்லாமல் தேங்காய் கொப்பரையை கவிழ்த்து வைத்ததுபோல் உள்ளார். இவர் ஆறு மாதங்கள் வெண்மை நிறமாகவும், ஆறு மாதங்கள் செம்மை நிறமாகவும் மாறுவதாகக் கூறப்படுகிறது. அம்பாள் 'கிரிராஜ கன்னிகை', 'உமையம்மை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர், மகாலட்சுமி, நடராஜர், பைரவர், சூரியன், சந்திரன், சப்த மாதர்கள், ஐயப்பன், நவக்கிரகங்கள் தரிசனம் தருகின்றனர்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி சிறப்பு. கல்லால மரத்தின் அடியில் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மறுகையில் தாமரையும் கொண்டு யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருகின்றார். இவரது காலடியில் முயலகன் இல்லை. வியாழக்கிழமை, குருப் பெயர்ச்சி ஆகிய சமயங்களில் ஏராளமான மக்கள் இத்தலம் வந்து இவரை வழிபடுகின்றனர்.
இக்கோயிலின் வெளிப்பக்கம் ஆற்றின் கரையில் உள்ள நந்தி தேவரின் வாயிலிலிருந்து எப்போதும் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கும். அதனால் காரணம் பற்றியே இத்தலத்திற்கு 'திருவூறல்' என்று பெயர் வந்தது என்றும் கூறுவர். சமீப காலங்களில் அவ்வாறு வருவது நின்று விட்டது. அந்த நந்தியையும் தரிசனம் செய்ய முடியாத அளவில் மூடி வைத்துள்ளனர். சிறிய ஜன்னல் வழியாகத்தான் காண முடியும்.
திருமால், காமதேனு, இந்திரன், எமன், சந்திரன், பஞ்ச பாண்டவர்கள், சப்த கன்னியர், உததி முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|